கடந்த அதிமுக ஆட்சியில் திருக்கோவிலூர் அருகே காவல் துறையால் பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் இன மக்கள் 15 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் மீது 3 மாதங்களில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருக்கோவிலூருக்கு மேற்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் தி.கே.மண்டபம் என்ற சிற்றூர் உள்ளது. அந்த சிற்றூரிலிருந்தும் 1 கிலோ மீட்டர் மேற்கே பெருமாள் கோவில் மண்டப்படியில் ஒரு பாழடைந்த மண்டபம் உள்ளது. அதன் அருகே தனியாக உள்ள இரு குடிசைகளில் இரு இருளர் குடும்பங்கள் தட்டான் மணல் சலித்தும், ஆடுகள் மேய்த்தும், செங்கல் சூளைகளில் வேலை செய்தும் பிழைத்துவருகின்றனர்.
(கோப்புபடம்)
கடந்த 22.11.2011 அன்று இரவு மேற்படி குடும்பங்களில் உள்ள முருகன், குமார் வயது (45), காசி, வெள்ளிக்கண்ணு, குமார் வயது (55), ஏழுமலை ஆகிய ஆறு நபர்களை காவல்துறையினர் பிடித்துச்சென்று திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அடைத்து சித்தரவதை செய்துள்ளனர். எஞ்சிய 9 குடும்ப உறுப்பினர்களை மேற்படி கிராமத்திற்கு அருகே உள்ள தைலமர தோப்பிற்கு கடத்திச்சென்று நான்கு இளம் பெண்களை நான்கு போலீசார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பத்திரிகையில் வந்த செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து. தற்போது இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 15 பழங்குடி இளைஞர்களுக்கு தலா 5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வழக்கை மூன்று மாதங்களுக்குள் தீவிரமாக விசாரிக்கவும், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட முருகன் கூறுகையில், ''அந்த நேரத்தில் நாங்கள் துயரங்களை அனுபவித்தோம். எங்கள் மீது கடுமையான சித்திரவதையை போலீசார் ஏவினார்கள். மேலும், பொய் வழக்கில் சிறை படுத்தப்படும் எங்களுடைய பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த நேரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் இப்படி ஒரு உத்தரவு பிறப்பித்து இருப்பது எங்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு உரிய தண்டனை வழங்குவது, சரியான தீர்ப்பாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட காவலர்கள் இதுவரை பிணையில் கூட எடுக்கவில்லை என்றும், தற்போது வரை அவர்கள் பணியில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News