கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துக - மத்திய அரசுக்கு தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் கடிதம்

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உத்தரவிடும்படி தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
 
அக்கடிதத்தில், தமிழகத்தில் இதுவரை 28 பேருக்கு ஒமைக்ரான் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் அதில் 4 பேர் மட்டுமே கூடுதல் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், மீதமுள்ள 24 பேர் குறைவான பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தோர் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டவர்கள் அனைவருக்கும் 48 மணி நேரத்திற்குள் பாசிட்டிவ் வந்திருப்பது ஒமைரானின் பரவும் தன்மை மிக வேகமாக இருப்பதை காட்டுகிறது என்றும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
image
தற்போது வரை பிரிட்டன் உட்பட 11 நாடுகள் ஆபத்தான பட்டியலில் வைக்கப்பட்டு அங்கிருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து வருவோருக்கு எவ்வித தீவிர கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்தது. ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து வருவோரில் வெறும் 2% நபர்கள் மட்டுமே ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் இவ்வாறு செய்வது ஒமைக்ரான் பரவலை கண்டறிய உதவாது என்பதாலும், பரவல் அதிகரிக்கக் காரணமாகி விடலாம் என்பதாலும், எவ்வித வேறுபாடும் இன்றி அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய சுகாதாரத்துறை அனுமதிக்க வேண்டுமென அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
image
அதேபோல், வரும் பயணிகளுக்கு 'நெகடிவ்' என முடிவு வந்தால் மட்டுமே விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுதிக்க வேண்டும், ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்திற்கு மாறுவதாக இருந்தால் கூட 'நெகடிவ்' முடிவு அவசியமாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வந்து நெகடிவ் என்றால் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின் 8 ஆம் நாள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் தொற்று உறுதியானால் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி சிகிச்சை வழங்கப்படும். நெகடிவ் என்றால் மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என கடிதத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post