கோவையில் மாணவிகளிடம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும், ஆடை அணியாமல் ஆன்லைனில் பாடம் நடத்திய ஆசிரியரை கைது செய்யக்கோரியும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, புகைப்படம் அனுப்பக்கோரி வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரும் ஒரு வாரத்திற்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இப்பிரச்னை தொடர்பாக தெரிவித்துள்ளார்.
ஆனால், தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறிய மாணவ, மாணவிகள் ஆசிரியரை கைதுசெய்ய வலியுறுத்தி பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆன்லைன் வகுப்பின்போது, மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து தொல்லை கொடுப்பதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினரும், பள்ளி நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News