மாநிலம் முழுதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தலைமை செயலாளரை ஆஜராக சொல்லி உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை அருகே சிட்லப்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள், திருவாலங்காடு அருகே தொழுதாவூர் நீர் நிலை, பண்ருட்டியில் உள்ள செட்டிப் பட்டறை மற்றும் மேட்டு ஏரிகள், விழுப்புரம் வடவம்பாலம் பாசன கால்வாய், மேல்மருவத்தூர் ஏரி, சோத்துப்பாக்கம் ஏரி கீழ்மருவத்தூர் ஏரி, கடலூரில் வி. மாத்தூர் ஏரி உள்ளிட்ட உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கக் கோரிய வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, நீதிபதிகள் தண்ணீர் மிகவும் அவசியமானது, தற்போது மழையால் நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என குறிப்பிட்டனர். இந்த அனைத்து வழக்கிலும் தொடர்புடைய ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு கண்காணிப்போம் என்றும் தெரிவித்தனர். அரசு தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது சில மனுதாரர்கள் தரப்பில், தனியார் ஆக்கிரமிப்பு மட்டுமல்லாமல், நீர்நிலைகளிலேயே குப்பை கொட்டும் மைதானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் ஆகியவை அமைத்து அரசும் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உத்தரவை நிறைவேற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 8ஆம் தேதி தள்ளிவைத்தனர். தவறும்பட்சத்தில் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட்டு விளக்கம் கேட்க நேரிடும் என எச்சரித்துள்ளது. அதேசமயம், 2 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மேற்கொண்டு எந்த கருணையும் காட்டப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News