”அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பிற்காக 130 கோடிக்கு ஆவின் நெய்”-அமைச்சர் நாசர் பேட்டி

தமிழக அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பிற்காக 130 கோடிக்கு ஆவின் நெய் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கிருஷ்ணகிரியில் பேட்டியளித்துள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் நிறுவனத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பால், பால் பவுடர், ஜஸ் கீரீம், நெய், உற்பத்தி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து ஆவின் ஜங்ஷன் விற்பனை நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார் அமைச்சர். இதைத் தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், “கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் மிகவும் மோசமான நிலையில் நீரில் மூழ்கி இருந்தது. ஆட்சி பொறுப்புக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின்தான், மூழ்கிய ஆவின் நிறுவனத்தை மீட்க நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆவின் நிறுவனங்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பாக்கி நிலுவை தொகையாக தீபாவளி பண்டிகையின்போது 330 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
image
அதிமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது திமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 27.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை போது இனிப்பு விற்பனையில் 40 நாட்களில் 53 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 18 நாட்களில் 85 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு என்று உற்பத்தி செய்யப்பட்ட இனிப்பு வகைகள் விற்பனை செய்ய முடியாமல் 8 கோடி ரூபாய் அளவிற்கு குப்பையில் கொட்டப்பட்டது. கடந்த கால ஆட்சியில் மூடப்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மீண்டும் திறக்கப்படும்.
இந்த ஆண்டு தமிழக அரசின் 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பில் நெய் இணைக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு 130 கோடி ரூபாய்க்கு ஆவின் நிறுவனத்தில் நெய் கொள்முதல் செய்ய ஆர்டர் வழங்கியுள்ளது. இதன் மூலம் 2 கோடி 16 லட்சம் குடும்பங்களுக்கு ஆவின் நெய் வழங்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.
image
தொடர்ந்து அவரிடம் “பால் உற்பத்தியாளர் ஒன்றியம் கலைக்கப்படுமா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கலைப்பது தொடர்பான முடிவினை முதல்வர் தான் எடுக்க வேண்டும். கடந்த கால திமுக ஆட்சியில் பால்வள ஒன்றிய தலைவர்களாக இருந்தபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அப்போது முதலமைச்சராக வந்த ஜெயலலிதா உடனடியாக ஒரு மாதங்கள் ஆகிய நிலையில் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் கலைத்து ஆணையிட்டார். ஆனால் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்களாகியும் இதுவரையில் கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களை இந்த அரசு முதல்வர் அவர்கள் கலைக்காமல் இருப்பது பெருந்தன்மையை காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.
ஜெகன்நாத்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post