கள்ளக்குறிச்சி அருகே காதலர்களான 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், சிறுமி இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைசந்தல் கிராமத்தில் வசித்து வந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் சிறுமியை காணவில்லை என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கச்சராபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக போலீசார் இருவரையும் தேடி வந்துள்ளனர். கடைசியாக அந்த சிறுவனின் போன் சோமண்டார்குடி ஆற்றின் அருகே ஆப் ஆகி இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று காலை சோமண்டார்குடி ஆற்றங்கரையோரம் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏ.டி.எஸ்.பி ஜவர்லால், டி.எஸ்.பி ராஜலட்சுமி மற்றும் காவல் துறையினர், கரையோரம் ஒதுங்கியிருந்த சிறுமியையும், மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்த சிறுவனையும் சடலமாக மீட்டனர்.
விசாரணையில் சிறுவன் சிறுமி இருவரும் காதலித்து வந்ததாகவும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டதால் கொலையா தற்கொலையா என்ற போலீசார் விசாரித்து வருகின்றனர்.