
திமுக எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மீதான அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக எம்.பி. கனிமொழி அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தார். 2020ஆம் ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக எம்.பி. தயாநிதி மாறன் அரசின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தார். இவைதொடர்பாக முதல்வர் மற்றும் தமிழக அரசு சார்பில் கனிமொழி மீதும், தயாநிதி மாறன் மீதும் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதும் அவதூறு வழக்கு தொடரபட்டது.

இவற்றை ரத்து செய்யக்கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தனர். அவை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக முடிவெடுத்திருப்பதாக தெரிவித்து, அரசாணையை சமர்ப்பிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி மூவர் மீதான அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News