
வடகிழக்கு பருவமழை முடிய ஒன்றரை மாதங்களுக்கு மேலாக இருக்கும் நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் தற்போதே வருட சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. நேரடியாக புயலின் தாக்கமோ, தாழ்வு மண்டலத்தின் தாக்கமோ இல்லாவிட்டாலும்கூட தமிழகம் தொடர்ச்சியாக அதிக கனமழை பெற்றது. குறிப்பாக கடந்த தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் தமிழகம் இயல்பை விட 17% அதிக மழை பெற்றிருந்தது. கடந்த 7ஆம் தேதி சென்னையில் ஒரே இரவில் கன மழை கொட்டி தீர்த்தது. 24 மணி நேரத்தில் 21 சென்டி மீட்டர் மழை பதிவானது. 45 நிமிடங்களிலேயே 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் வருட சராசரி மழையளவை தற்போதே எட்டிவிட்டது. அதாவது நுங்கம்பாக்கத்தில் வருட சராசரி மழை அளவு140 சென்டிமீட்டர் என்ற நிலையில் தற்போது வரை 141 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் முடிவடையாத நிலையில் தற்போதே வருட சராசரி எட்டப்பட்டுள்ளது. இதேபோல மீனம்பாக்கத்தில் வருட சராசரி 138 சென்டிமீட்டர் என்ற நிலையில் தற்போது வரை 132 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது. கடலூரில் வருட சராசரி 134 சென்டிமீட்டர் தற்போது வரை 156 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது.

புதுச்சேரியிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்கிறது. புதுவையில் வருட சராசரி மழையளவு134 சென்டிமீட்டர். தற்போது வரை 156 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது. சேலத்தில் வருட சராசரி 102 சென்டிமீட்டர் மழை என்கிற நிலையில் தற்போது வரை 118 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது. இவை மட்டுமல்லாமல் இன்னும் பல மாவட்டங்களில் வருடத்தின் சராசரி மழை அளவை எட்டி விட்டோம். வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களே ஆகி உள்ளது. பருவமழைக் காலம் இன்னும் ஒன்றரை மாதம் நீடிக்கும் என்ற நிலையில் தற்போதே வருடத்தின் சராசரி மழையளவு எட்டப்பட்டு விட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News