
புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் கடித்து 82 வயது மூதாட்டி உட்பட 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து சுற்றித் திரியும் அந்த வெறிநாயால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் உடனடியாக அந்த நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பிருந்தாவனம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித் திரிவதால் பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் நோய்வாய்ப்பட்ட நாய்கள் வெறிநாய்கள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூறாக திரிவதாகவும், அதனை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதனை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், இன்று பிருந்தாவனம் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று 82 வயது மூதாட்டி உட்பட மூவரை கடித்து குதறியது.
இதில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அப்பகுதியில் வெறிநாய் சுற்றித்திரிந்த தகவல் பரவியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமடைந்துள்ளனர். இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வெறி நாயை பிடிப்பதோடு, புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நோய்வாய்ப்பட்ட நாய்கள் மற்றும் தெரு நாய்களை பிடித்து வேறு இடத்தில் கொண்டு போய்விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News