
மயிலாடுதுறை அருகே தொடர் மழை காரணமாக 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் மூன்றாவது முறையாக நீரில் மூழ்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, தங்களுக்கு இடுபொருள் தேவையில்லை என்றும், இழப்பீடே வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில், 3 நாள் மழையில் மயிலாடுதுறை அருகே பொன்னூர், பாண்டூர், மகாராஜபுரம், அருண்மொழித்தேவன் ஆகிய கிராமங்களில் மழை நீர் வடிய வழியின்றி 1000த்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

கடந்த மழையின்போது நீரில் மூழ்கிய பயிர்களை விவசாயிகள் நீரை வடிய வைத்து அடியுரங்களை இட்டு காப்பாற்றி வரும் நிலையில், தற்போது மூன்றாவது முறையாக பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால்; பயிர்களில் விளைச்சல் குறைந்து பெரும் நஷ்டம் ஏற்படும் என்று அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதிக்கு வடிகால் வாய்க்காலாக விளங்கும் எல்லை வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததே மழைநீர் வடியாததற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே எல்லை வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி வீணாகிவிட்டதால், அரசு அறிவித்துள்ள இடுபொருள் தங்களுக்கு தேவையில்லை என்றும், ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மா.ராஜாராம்
தொடர்புடைய செய்தி: தமிழகமெங்கும் கொட்டி தீர்க்கும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News