
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டரில், “அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்படும் சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சற்குணனுக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசி வருகிறார்” எனக்கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News