
The cane-eating wild elephant with his cub
ஆசனூர் அருகே கரும்பு லாரியை வழிமறித்த காட்டுயானை தனது குட்டியுடன் கரும்பை எடுத்து சாப்பிட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் ஆசனூரில் ஏராளமான யானைகள் உள்ளன. ஆசனூர் வனப்பகுதியின் மத்தியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் யானைகள் தீவனம் தேடி சாலையை கடந்து செல்லுவது வழக்கம். சாலையோரம் முகாமிடும் யானைகள் அவ்வழியாக வரும் லாரிகளில் இருந்து வீசியெறியும் கரும்புத் துண்டுகளை சாப்பிட்டு பழகியதால் கரும்புகளை எதிர்பார்த்து சாலையோரம் காத்திருகின்றன.

இந்நிலையில் சாம்ராஜ்நகரில் இருந்து வந்த கரும்பு லாரியை குட்டியுடன் வந்த பெண்யானை மறித்தது. இதை பார்த்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினர். அப்போது பெண்யானை தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்புகளை எடுத்து குட்டிக்கு கீழே போட்டது. அதனை எடுத்து குட்டியுடன் யானை சாப்பிட்டது. லாரியில் இருந்த ஓட்டுநர் அமைதியாக அவரது இருக்கையில் இருந்தார். ஓட்டுநரை பற்றி கவலைப்படாமல் யானை கரும்புகளை எடுத்து சாப்பிடுவதில் முனைப்புகாட்டியது.

இதையடுத்து சிறிதுநேரம் கரும்புகளை சாப்பிட்ட யானை பின்னர் காட்டுக்குள் சென்றது. யானை வழிமறித்ததால் அவ்வழியாக வந்த வாகனங்கள் சுமார் அரைமணி நேரம் காத்திருந்தன. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானை மீண்டும் வராதபடி காவல்பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.