கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பனை மரங்களை அகற்றியதாக கூறி விவசாயி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் அருகே உள்ள மேல ஈரால் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரின் மகன் தாமரைச்செல்வன் (41). இவர் தனது விவசாய நிலத்தில் கம்பு, சோளம், பாசி, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் நிலத்தின் அருகே உள்ள நீரோடை பகுதியில் உள்ள பனைமரங்களில் அணில்கள் கூடு கட்டியதோடு இவரின் நிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்பொழுது விவசாயத்திற்காக தனது நிலத்தை தயார்படுத்தி வரும் நிலையில், அங்கிருந்த பனை மரங்களை அகற்ற முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து பனைமரங்களை அகற்ற வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தாமரைச்செல்வன், அரசிடம் அனுமதி பெறமால் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு, நீரோடையில் இருந்த 10 பனை மரங்களை அகற்றியுள்ளார்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ்குமார் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தாமரைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News