
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுமென கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, ‘ஆண்டுதோறும் நடக்கும் தேசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு இலவசமாக வழங்கும் கோமாரி நோய்த் தடுப்பு மருந்துகள், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கால்நடைகளுக்கு போடப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கோமாரி நோய் தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு, முகாம்கள் நடத்துவதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. எனினும் இருப்பு வைக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளைக் கொண்டு நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நூறு சதவிகிதம் தடுப்பூசிப் பணி நிறைவடைந்துள்ளது.

இதன் மூலம் இப்போதைக்கு தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது மத்திய அரசு மூலம் பெறப்பட்டுள்ள கூடுதலான 13 லட்சத்து 79 ஆயிரம் தடுப்பூசி மருந்துகளை சேலம், திருப்பூர், மதுரை, கோவை மாவட்டங்களில் கால்நடைகளுக்குப் போடும் பணி நடந்து வருகிறது. விரைவில் மத்திய அரசு மூலம் போதிய அளவு தடுப்பு மருந்து பெறப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் கோமாரி நோய்த்தடுப்பு மருந்து முகாம்கள் நடத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... சத்தியமங்கலம்: வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News