
டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
- விருதுநகர் மாவட்டம் சேதுபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதோடு, உள்ளூர் பகுதி மக்களின் கருத்துக்கள் குறித்தும் கவனத்தில் கொண்டு, நான்கு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் திருச்சுழியைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “திருச்சுழி தாலுகா சேதுபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பகுதியில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியும், அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகின்றன. அரசு உயர்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, பாண்டியன் கிராம வங்கி, விவசாயகள் கூட்டுறவு வங்கி போன்றவை இலுப்பையூர் கிராமத்தில் அமைந்துள்ளன.

இந்த சாலையை கடந்தே மக்கள் செல்ல வேண்டும். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது சேவையை பயன்படுத்துவோர் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர். எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், டாஸ்மாக் கடையை மூட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் மீண்டும் டாஸ்மாக் கடையை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, விருதுநகர் மாவட்டம் சேதுபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி, நீதிபதி துரைசாமி அமர்வு டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.. இந்த வழக்கை பொறுத்தவரை பெரும்பாலான உள்ளூர்வாசிகள் டாஸ்மாக் கடையை திறக்க விரும்பவில்லை. ஆகவே மனுதாரர் இதுகுறித்து புதிதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் நேரடியாகவோ அல்லது தனது நேரடி பிரதிநிதி மூலமாகவும் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று தூரக் கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும். மேலும் உள்ளூர் பகுதி மக்களின் கருத்துக்கள் குறித்தும் கவனத்தில் கொண்டு, நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
டாஸ்மாக் கடை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எடுக்கும் முடிவு குறித்து நீதிமன்றத்திற்கு மூன்று மாதங்களில் தெரிவிக்க வேண்டும். தூர கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News