
சென்னையில் முன்விரோதம் காரணமாக விசிக பிரமுகரை வெட்டிவிட்டு தப்பியோடிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டு அரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107 வது வட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சேத்துப்பட்டு மேயர் சிட்டிபாபு தெருவில் இளங்கோவனும் அவரது நண்பர் ஜெயவேலும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 6 பேர் இளங்கோவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் படுகாயமடைந்த இளங்கோவனை அருகிலிருந்த நபர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இளங்கோவன் மற்றும் சஞ்சய் பிரபு ஆகியோருக்கிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரது நண்பர்களோடு சேர்ந்து வெட்டியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடியவர்களை போலீசார் தேடி வரும் நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News