
முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட விரைவு ரயில் வண்டிகளை இயக்கியது போல, தமிழகத்திற்குள் ஓடும் சிறப்பு விரைவு வண்டிகளிலும் பொதுப் பெட்டிகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார், மதுரை எம்பி சு.வெங்கடேசன்.
இதுதொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிறப்பு விரைவு ரயில் வண்டிகளில் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அண்மையில் சலுகைகளை திருப்பி அளிக்க நான் ரயில்வே அமைச்சரை சந்தித்து கோரிய போதும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருந்தேன். இப்போது இந்தியா முழுவதற்கும் ரயில்வே மண்டலங்களுக்குள் ஓடும் விரைவு ரயில்களில் மட்டும் பொதுப் பெட்டிகளை இணைத்திட முடிவெடுத்துள்ளது. முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை வழங்குவதற்கு கவுண்டர்களை திறக்கவும் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் முதல் தேதி முதல் கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் இணைப்பாக உள்ள 23 விரைவு வண்டிகளில் உள்ள முன்பதிவு செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் சிலவற்றை பொதுப் பெட்டிகளாக மாற்றி நவம்பர் முதல் தேதி முதல் அமலாக்க ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. அதேபோல நவம்பர் பத்தாம் தேதி முதல் நான்கு வண்டிகளில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளை பொதுப் பெட்டிகள் ஆக மாற்றி ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்கும் அதே நேரத்தில் தமிழகத்திற்குள் ஓடும் சிறப்பு விரைவு வண்டிகளிலும் உடனடியாக பொதுப் பெட்டிகளை இணைத்திட கோருகிறேன். அத்துடன் ரயில்வே மண்டலங்களை தாண்டி டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற ஊர்களுக்கு செல்லும் சிறப்பு விரைவு வண்டிகளிலும் பொதுப் பெட்டிகளை இணைத்திட விரைந்து முடிவெடுக்க வேண்டுகிறேன்.

அதேபோல புறநகர ரயில் வண்டிகள் எப்போது விரைவு வண்டிகளில் பொதுப் பெட்டிகள் இணைக்கப்படுகிறதோ அப்போது முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ரயில்வே வாரியம் எனக்கு முன்பு அறிவித்திருந்தது. இப்போது பொதுப் பெட்டிகளை விரைவு வண்டிகளில் இணைத்திட முடிவெடுத்த அதே கையோடு புறநகர வண்டிகளையும் இயல்பு நிலைக்கு இயக்கிட கேட்டுக்கொள்கிறேன். என் கோரிக்கையை ஏற்று முன்பே முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட விரைவு ரயில் வண்டிகளை இயக்கியது போல சாதாரண பயணி வண்டிகளையும் இயக்கிட மீண்டும் வலியுறுத்துகிறேன்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News