உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை காரணமாக, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராக இயலவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது, கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூலை மாதம் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவிகிதம் வரை சொத்து சேர்த்தது தெரியவந்தது. மேலும், கணக்கில் காட்டப்படாத 25 லட்ச ரூபாய், சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த, ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அலுவலகத்தில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் பணிகள், தேர்தல் பரப்புரை காரணமாக தன்னால் விசாரணைக்கு தற்போது ஆஜராக இயலாது என எம்.ஆர்.விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தெரிவித்து, அவகாசம் கேட்டுள்ளார். தேர்தல் முடிந்த பிறகு, விசாரணைக்கு ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News