‘கமல்ஹாசனை திமுகவின் ‘பி’ டீம் என்று சொன்னது நிரூபணமாகிவிட்டது’ - ஜெயக்குமார்

“நான் அன்றே சொன்னேன், கமல்ஹாசன் திமுகவின் ‘பி’ டீம் என்று, அது இன்று நிரூபணமாகியுள்ளது” என ஈ.வி.கே. எஸ்.க்கு ஆதரவாக கமலஹாசன் பரப்புரை செய்யவுள்ளது தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

தென்னகத்தின் முதல் பொதுவுடைமைவாதியான 'சிந்தனை சிற்பி’ சிங்காரவேலரின் 77-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி அருகே உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “இந்தியாவிலேயே பொதுவுடைமை கருத்தை முதன்முதலில் கொண்டுவந்து மே தினத்தை கொண்டுவந்த பெருமை சிங்காரவேலரை தான் சேரும். 9.20 ஏக்கர் நிலத்தை கல்விக்காக வழங்கினார்.

மூட நம்பிக்கை, சமூகத்துக்கு ஒவ்வாத கருத்து, பெண்ணுரிமை, சமூகம் தலைநிமிற எப்படி செயல்பட வேண்டும் என அறிவுப்பூர்வமான கருத்துக்களை வழங்கியவர். தலைச்சிறந்த தன்மான சிங்கம், பகுத்தறிவாளர், இன்று சிலர் இருக்கிறார்கள் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொண்டு கோயில் கோயிலாக செல்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் சிந்தனை சிற்பி பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதுபவர்களுக்கு பொங்கல் தினத்தில் விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு விருதுகளும் வழங்கப்பட்டது.

ராயபுரத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இவருக்கு புகழ் சேர்க்கவில்லை. நாங்கள் அனைத்து வகையிலும் புகழ் சேர்த்தோம். ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் ஓ.பி.எஸ் வேட்பாளருக்கு முன் மொழிவதற்கு ஆள் இல்லை, டிடிவி தினகரனுக்கு தேர்தல் என்றாலே பயம் என்ற நிலை உருவாகி விட்டது. நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், தில்லுடன் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால் திமுக, காங்கிரஸ் கட்சியை நிறுத்துகிறது. தில் இருந்தால் அவர்கள் நிற்க வேண்டியது தானே?. தேர்தலில் தோல்வியடைந்தால் நாங்கள் நிற்கவில்லை காங்கிரஸ் தான் நின்றது என திமுக கைகாட்டி விடும்.

ஈரோடு இடைத்தேர்தலில் எலி பொறியில் மாட்டிக் கொண்டது போல் மாட்டிக் கொண்டார்கள். மேலும் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் வகையில் எங்கள் வெற்றியும் அவர்கள் தோல்வியும் இருக்கும். மொத்த அமைச்சர்களும் ஈரோட்டில் தான் முகாமிட்டுள்ளனர் முதல்வரும், உதயநிதியும் மட்டுமே சென்னையில் உள்ளனர். ஏன் இரவோடு இரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அறிவித்த பின்னர் அனைத்து சாலை பணிகளையும் செய்கிறார்கள். இதற்கு முன்பு ஏன் செய்யவில்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்து வருகிறார்கள். 85% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொய் கூறுகிறார். உலகத்தில் இவரை போன்று பொய் சொல்பவரை நான் பார்த்ததே இல்லை.

மீனவர் வாழ்வாதரத்தை அளித்து நினைவு சின்னம் தேவையா?. அறிவாலயத்தில் 10 ஆயிரம் அடி கூட சிலை வைத்துக் கொள்ளுங்கள், நிலவு வரை வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் பணத்தில் அமைத்துக் கொள்ளுங்கள். மக்கள் பணத்தில் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஏன் வைக்கிறீர்கள். பள்ளிக்கு வெளியில் வசூல் செய்கிறீர்கள், 81 கோடி எங்கிருந்து வரும். அரசு பொறுத்தவரை கடினமான நிதி நெருக்கடி இருப்பதாக சொல்கிறார்கள். அதிமுக பேனா சின்னம் வைப்பதை எதிர்க்கிறது. அதனை வைக்க விடமாட்டோம். கமல்ஹாசன் மக்கள் நலனுக்காக கட்சியை தொடங்கவில்லை. கூட்டணி அமைத்து சலுகைகள் பெறலாம் என்று தான் அவர் கட்சியை தொடங்கினார். கமல்ஹாசன், திமுகவின் ‘பி’ டீம் என்று நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். இன்று அது நிரூபணம் ஆகி உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post