
மதுரையில் ஊ சொல்றியா பாட்ட போட சொல்லி மதுபோதையில் அடுப்பில் அசால்டாக பெட்ரோல் குண்டை பற்ற வைத்து வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாநகர் செல்லூர் அய்யனார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அஜ்மீர் காஜா என்பவரது மகன் முகம்மது சலீம், இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பாக அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று ஏற்கனவே வேலை செய்த உணவகத்திற்கு மீண்டும் வந்த அவர், உணவகத்தின் அருகே மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த முகம்மது அபி என்பவருக்குச் சொந்தமான செல்போன் கடைக்குச் சென்று அங்குள்ள ஊழியரிடம் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த சலீம், ஊ சொல்றியா பாட்ட போட்டு சவுண்டு வை, நான் டான்ஸ் ஆடணும் என செல்போன் கடை ஊழியரிடம் கூறியுள்ளார்

அதற்கு ஊழியர் முடியாத என்று கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சலீம் இரு உன் கடையில் பெட்ரோல் குண்டு போடுறேன் என கூறிவிட்டு சென்ற சில நிமிடங்களில் திரும்பிய சலீம், கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்து இப்ப பாட்ட சவுண்டா வை இல்லையென்றால் பெட்ரோல் குண்டு வீசிவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் செல் கடை ஊழியர் இங்கிருந்து போ என சலீமிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை அருகில் இருந்த உணவகத்தின் அடுப்பில் பற்றவைத்த சலீம், செல்போன் கடை மீது அசால்டாக தூக்கி எறிந்துள்ளார். இதனால் பெட்ரோல் குண்டு வெடித்து கடையின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக ஊழியர்கள் காயமின்றி தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மதுபோதையில் செல்போன் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சலீமை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசிய இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News