அதைத்தொடர்ந்து பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் ஆணையிட்டார். மேலும் இன்றும் நாளையும் அவர்கள் அவையில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் முழக்கமிட்டவாறே, சபாநாயகரை கண்டித்தவாறே பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினர். இதனால் அமளியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் அமைச்சர் துரைமுருகன், `ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் தாக்கல், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் தாக்கல் போன்றவை குறித்த அச்சத்தால் அமளி செய்கின்றார்கள்’ என்று கூறி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை என அவை முன்னவர் துரைமுருகன் பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்க பழனிசாமி தரப்பு கோரியிருந்தனர். அனைத்துக்கும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். பேரவையில் சபாநாயகர் அப்பாவு பேசியவை:
“ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில், ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டுமென்று இபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்திருந்தார்கள். இது ஆய்வுக்குழுவில் இருந்து வந்தது. இன்று பேரவையில் இதற்கு விளக்கமளிப்பதாக நான் கூறியிருந்தேன். அந்த விளக்கமாகத்தான் `இந்த அவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம். ஏனெனில் பேரவை விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு அங்கீகாரம் இல்லை’ என்று கூறினேன். ஆர்.பி.உதயகுமாரை, அலுவல் ஆய்வுக்குழுவில் நியமிக்க சொன்னார்கள். அலுவல் ஆய்வுக்குழுவில் எந்த உறுப்பினர் இருக்கவேண்டுமென்பது, சட்டமன்ற தலைவர் முடிவுதான். அதைவிடுத்து, யாரும் யாரையும் பரிந்துரைக்க முடியாது. ஆகவே அதில் நான் தலையிட முடியாது.
ஓபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்களை, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விடுவித்துவிட்டதாக இபிஎஸ் தரப்பு கூறியுள்ளனர். இது எனது ஆய்வில் இப்போதும் உள்ளது. இந்த அவையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட, எதிர்க்கட்சித் தலைவர் – துணைத்தலைவர் பதவிகளுக்கு கையெழுத்திட்டு தந்தவர்கள், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும்தான். இந்த ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் – இடைக்கால தற்காலிக பொதுச்செயலாளர் என்பதில் சிக்கல் வருகிறது.அதிலும், இபிஎஸ் தரப்பு `நாங்களே தலைவர்’ என்கின்றனர். ஓபிஎஸ் தரப்பு, `இதில் தேர்தல் பதிவேட்டின்படி, இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர்தான். இதுதொடர்பான உச்சநீதிமன்றத்திலும் வழக்கும் நிலுவையில் உள்ளதென்பதால், நான் இல்லாமல் முடிவெடுக்கக்கூடாது’ என சொல்கின்றனர். இரண்டுமே சரியான கருத்துதான். எப்படியாகினும் இது சட்டமன்ற தலைவர் எடுக்கவேண்டிய முடிவு என்பதால், என்னால் தலையிட முடியாது.
கலகம் பண்ணதான் இன்னைக்கு வந்திருக்கீங்க! - இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களை கடிந்துகொண்ட அப்பாவு #TNAssembly | #Appavu | #MKStalin | #EPS | #OPS pic.twitter.com/oHv8lLVdib
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 18, 2022
கடந்த காலத்தில் சக்கரபாணி அவர்கள், மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு அவரது உடல்நலனை கருத்தில்கொண்டு இருப்பிட வசதி கேட்டபோது, இதே கட்சியினர் மனசாட்சி இல்லாமல் `இப்போது இருக்குமிடமே வசதியாகத்தான் உள்ளது’ எனக்கூறி நடந்துக்கொண்டனர். உண்மையில் அவர் மிகவும் அசௌகரியமாக வந்துசென்றார். மனசாட்சியே இல்லாமல் அவர்கள் அதை செய்ததற்காக, ஆனால் இப்போது இப்படி இடமாற்றம் கேட்கின்றார்கள். அதற்காக பழைய நிகழ்வை மனதில் வைத்துக்கொண்டு என்னால் முடிவெடுக்க முடியாது. விதிகளின்படியே இந்த அவை முடிவெடுப்பேன். விதிகளின்படி, `ஒருவரை இந்த இடத்தில்தான் உட்கார வைக்க வேண்டும் – அந்தச் சின்னத்தில் உட்கார வைக்க வேண்டும்/கூடாது’ என்றெல்லாம் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. வேண்டுமெனால், `எனக்கு இந்த இருப்பிடம் எனக்கு அசௌகரியமாக இருக்கிறது. எனக்கு மாற்றித்தாருங்கள்’ என்று கேட்கலாம். அப்போது அதை கருத்தில்கொண்டு செயல்படவும். காலை 9.22க்கு வந்துவிட்டு, 9.32-க்குள் இடமாற்றம் என்று சொன்னால், அதை எப்படி இந்த சபை `எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்றெல்லாம் செய்யும்?
1988-ல் ஜானகி அம்மாள் பேரவைக்கு வந்தபோதும் இப்படித்தான் நடந்தது. அதற்குப் பின் 1989-ல் கலைஞர் கருணாநிதியின் கையிலிருந்த பட்ஜெட் உரையை பிடுங்கினர். அப்போது களேபரமே செய்தனர். இப்படி அவர்களால் இந்த சபையில் ஏராளமான கரும்புள்ளிகள் அவர்களால் பதியப்பட்டுள்ளன. அப்படித்தான் இன்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர், கரும்புள்ளி ஏற்படுத்தவே வந்துள்ளனர். இது அப்பட்டமாக தெளிவாக தெரிந்தது. கேள்வி நேரமே நடத்தவேகூடாது என்றெல்லாம் சொன்னார்கள்… தகராறு செய்தனர். இதெல்லாம் சரியா? 10 ஆண்டுக்காலத்தில் அவர்கள் ஆட்சியிலிருந்தனரே… அப்போது இப்படியான மரபை அவர்கள் முன்னெடுத்தனரா? அப்படியிருக்கையில் இது விதி இல்லை என்பது அவர்களுக்கே தெரிந்திருக்கிறதுதானே. இப்படி சொல்ல பழைய உதாரணங்கள் பல என்னிடம் உள்ளன. இங்கே எல்லாவற்றையும் குறிப்பிட இது இடமில்லை.
`கேள்வி நேரம் முடிந்தவுடன் நீங்கள் பேச நேரம் தருகிறேன்’ என இபிஎஸ் தரப்பினருக்கு பலமுறை சொன்னேன். ஆனால் ஒட்டுமொத்தமாக சபையை நடத்தக்கூடாது என்ற நோக்கத்தில் களேபரம் செய்து, கூச்சலிட்டனர். அதன்பின் அவைமுன்னவர் சொன்னபோதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற தீர்மானங்களையெல்லாம் இன்று நிறைவேற்ற உள்ளோம். அதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏர்படுமோ என்றேண்ணி தான் அவர்கள் வெளியேறினரா என எனக்கு ஐயம் தோன்றுகிறது.
அதேபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையும் இன்று தாக்கலாகிறது. தூத்துக்குடியில் காக்கா குருவிபோல மக்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கெல்லாம் அஞ்சிதான் வெளியேறினார்களா என்று தெரியவில்லை. உண்மையில் அவர்கள் இங்கு இருந்திருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதி என்ற முறையில் இங்கு இருப்பதை விட்டுவிட்டு, களேபரம் செய்தனர். அவர்களின் இந்தச் செயலை கருத்தில் கொண்டு, இன்றும் நாளையும் இந்த அவையிலிருந்து ஒத்திவைக்கிறேன்” என்றார்.