தெருக்குழாயை மூடி அமைக்கப்பட்ட சாலை சரிசெய்யப்பட்டது - திருவள்ளூர் ஆட்சியர் விளக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் தெக்களூர் ஊராட்சியில் இருளர் காலனியில் 30க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் அமைத்து தெரு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அத்தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.

image

இந்நிலையில், பழங்குடியினர் நலத்துறை சார்பில் இருளர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தெரு குடிநீர் குழாய் அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் போது, ஒப்பந்ததாரரின் அலட்சிய போக்கால் குழாயில் குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத வகையில் தெரு பொது குழாயை மூடியவாறு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் இருளர் இன பெண்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

தடையின்றி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இந்தப் பிரச்சனை தனது கவனித்திற்கு கொண்டுவரப்பட்டு சரிசெய்யப்பட்டு விட்டதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் புதிய தலைமுறை செய்திக்கு பதிலளித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிலில், “இதுகுறித்து விசாரித்தோம். செய்தியில் உள்ள காணொளி சாலைப் பணியின் போது எடுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும். அதன்பின் பைப் லைனும், குழாயும் சாலை ஓரத்துக்கு மாற்றப்பட்டது. சரிசெய்யப்பட்ட புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post