அரசு நிகழ்ச்சிகளில் தனக்கு அழைப்பு கொடுப்பதில்லை என்றும் அதையும் மீறி அழைப்பு கொடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சேலம் எம்.பி.யாக உள்ள எஸ்.ஆர். பார்த்திபன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''சுயமரியாதை என் உயிரினும் மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பிக்கு அழைப்பு கொடுக்க கூடாது; அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கழகத் தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.
ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்கட்சி எம்.பி. என்று நினைக்கிறார் போலும். மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார்.
என்னை புறக்கணிப்பது எனக்கு வாக்களித்து 20 இலட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம். நான் போராட்டக்காரன் என்பதனை அனைவரும் அறிந்த ஒன்று. இதை சம்மந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்'' என்று அவர் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த குற்றச்சாட்டு குறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜிடம் விளக்கம் கேட்க முயற்சித்தோம். ஆனால் அவரிடமிருந்து பதில் ஏதுமில்லை. அலைபேசி அழைப்பையும் அவர் எடுக்கவில்லை.
இதையும் படிக்க: ’கே.என்.நேரு இனிமேல் அவ்வாறு பேசாமலிருக்க ஸ்டாலின் மூலம் அறிவுறுத்தப்படும்’-ஆர்.எஸ்.பாரதி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News