40 வருடங்களாக மழை நீரை மட்டுமே பருகி வரும் முதிய தம்பதியர் குடும்பம். மருத்துவரிடம் செல்லாமல் ஆரோக்கியமாக வாழ்க்கை நடத்த அனைவரும் மழை நீரை சேமித்து வைத்து பருக ஆலோசனை.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதியர் மற்றும் குடும்பம் மழை நீரை மட்டுமே 40 வருடங்களாக பருகி ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.
வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கோதையான் (வயது 76) மற்றும் இவரது மனைவி ராணியம்மாள் (வயது 72). இந்த தம்பதியருக்கு 2 மகன்கள், ஒரு மகள் என அவர்களுக்கு திருமணமான நிலையில் இவர்கள் தங்கள் குடும்பத்துடன் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டி கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வரை கிணற்று நீரையோ மற்றும் ஆழ்துளை குழாய் நீரையோ பருகாமல் மழை நீரை மட்டும் சேமித்து பருகி தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன்களுடன் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 40 வருடமாக மழை பெய்யும் போது சிறு சிறு பாத்திரங்கள் முதல் பெரிய பிளாஸ்டிக் பேரல் வரை நீரை சேமித்து வைத்துள்ளனர். மேலும் மழை வந்த 10 நிமிடம் கழித்து தூசு தும்புகள் எல்லாம் சென்ற பிறகு வீட்டின் கூரையில் இருந்து வழியும் சுத்தமான மழை நீரை அப்படியே பாத்திரங்களில் பிடித்து சேமித்து வைத்துக் கொண்டு பின்னர் வடிகட்டி அப்படியே அந்த நீரை காய்ச்சி பருகியும் சமையலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் வயது 75 க்கும் மேலான நிலையில் கடந்த 40 வருடங்களாக மழை நீரை பருகி வருவதால் இதுவரை எவ்வித நோய் தொற்று பாதிப்பு வராமல் மருத்துவர்களை அணுகாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.
இதைபற்றி பேசிய ராணியம்மாள், இதுவரை நாங்கள் 6 மாதங்கள் மழை நீரை சேமித்து வைத்தாலும் நீரில் எவ்வித பூச்சுகளோ,நாற்றமோ, சேருவதிலை என்றும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதாக கூறுகின்றார்.
இதுகுறித்து பேசியிருக்கும் கிராமவாசி ஜெகநாதன், இவர்களை பார்த்து ஊரில் பல்வேறு வீடுகளில் மழை நீரை பிடித்து சேமித்து வைத்து பருகும் பழக்கம் ஏற்பட்டுள்ளது என கூறுகிறார்.
இதை போல் நாடெங்கும் மழை நீரை சேமித்து வைத்து பருக வேண்டும் எனவும், இதனால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும், மழைநீரின் அவசியத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News