பென்னாகரம் அருகே வனப் பகுதியை விட்டு வெளியே வந்த இரண்டு காட்டு யானைகள் ஏரியில் குளித்து குதூகலித்துள்ளது. ஊருக்குள் யானைகள் வந்ததால், அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் வனத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளில் உள்ள யானைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப் புறங்களில் நுழைவதும் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கபந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் வனத்தை விட்டு கிராமப்புற பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் பாப்பாரப்பட்டி அடுத்த திகிலோடு பகுதியில் விளை நிலங்களில் நுழைந்து துவம்சம் செய்துள்ளது. பின்னர் அதேபோல் பகல் நேரங்களில் தண்ணீர் இருக்கும் இடங்களில் குளித்து குதூகலமாக இருந்துள்ளன. இதைக்கண்ட ஊர்மக்கள், யானைகளை கண்டு அஞ்சிவருகின்றனர்.
இதையடுத்து கடந்த நான்கு நாட்களாக பாப்பாரப்பட்டி அடுத்த வட்டுவனஹள்ளி ஊராட்சி பவளந்தூரில் உணவு தேடி இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், அவர்களாலும் யானையை விரட்ட முடியவில்லை. இதையடுத்து மிகுந்த அச்சத்தில் இருந்து கிராம மக்கள் ஒன்றுகூடி, நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் அனுப்பினர். அடிக்கடி இது போன்று நடைபெறுவதால் இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News