பணகுடி அருகே வடக்கன் குளத்தில் விநாயகர் கோவிலில் கோவில் நிர்வாக துணை செயலாளர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ராஜா. இவர் அதே பகுதியில் உள்ள அதிசய விநாயகர் கோவிலின் துணை செயலாளராக இருந்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோவில் வளாகத்தில் முருகன் கோவில், அம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் என தனித்தனியே அமைந்துள்ளது. இதில் முருகன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலுக்கு என இரண்டு கொடிமரங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு அதே ஊரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொடிமரம் வைப்பதற்கு நன்கொடை அளித்து பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே இன்று கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் தலைவராக இருக்கும் மகேந்திர பூபதி மற்றும் உதவி செயலாளர் வெங்கடேஷ் ராஜா மற்றும் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வெங்கடேஷ் ராஜாவுக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.
இதில் வெங்கடேஷ் ராஜா அவராகவே சென்று வடக்கன் குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வெங்கடேஷ் ராஜா வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதனிடையே சம்பவ இடத்திற்குச் சென்று வள்ளியூர் எஸ்பி சமயசிங் மீனா மற்றும் பணகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News