ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் இளம் பெண் மதுரை மாணவி

jallikattu bulls

தொடர்ந்து 5 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றார் மதுரையை சேர்ந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவியொருவர். சில போட்டிகளில் தனது காளை பிடிபட்டபோதிலும், களத்தில் கொடுக்கும் ஆறுதல் பரிசை வாங்க மறுக்கும் வைராக்கிய குணத்துடன் இருக்கும் அம்மாணவி, தனது காளையை வெற்றி பெற்றால் மட்டுமே பரிசை பெற வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடு வலம் வந்தவராவார்! இவரது காளை இன்று கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று பரிசை பெற்றுள்ளது. இது ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் இளம் பெண்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகவும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாகவும் உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை, உலக அரங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை போலவே மதுரை மக்கள் கருதுவார்கள். அந்த அளவிற்கு ஜல்லிக்கட்டு போட்டி மீது எல்லை கடந்த ஆர்வமும் காளைகள் மீது அளவில்லா பற்றும் கொண்டுள்ளனர். அதற்கு சான்றாக உள்ளவர்தான் மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்த முத்துக்கோனார் - செலவராணி தம்பதியின் மகள் யோகதர்ஷினியும் உள்ளார். தற்பொழுது 11ம் வகுப்பு படிக்கும் இவர் கடந்த 5 ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வாடிவாசலில் அவிழ்த்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தனது தம்பியாக நினைத்து இதுவரை 3 காளைகளை வளர்த்து வரும் இவர், தான் வளர்க்கும் காளைகளை பார்க்காமல் ஒரு நாள் கூட இருந்ததே இல்லை என்கிறார்.

jallikattu bulls

அவனியாபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தனது காளை பிடிபட்ட நிலையில் விழா கமிட்டி கொடுத்த ஊக்க பரிசை வாங்க மறுத்த நிலையில், தன்னம்பிக்கையோடு போராடிய இவர் கோவையில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையை வெற்றி பெற செய்து தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்களை வாங்கியுள்ளார்.

காளை என்றால் உயிராக நினைத்து வளர்ப்பதாக கூறும் யோகதர்ஷினி, ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் போது விரதம் இருந்து காளையை வாடிவாசலில் அவிழ்ப்ப்பதாக கூறுகிறார். நம்மிடையே இதுகுறித்து அவர் பேசுகையில், “எனது காளை போட்டியில் வெற்றி தோல்வியை பெறுவது பற்றியெல்லாம் ஒருபோதும் நான் கவலை கொண்டதில்லை. காளை வெற்றி பெற்றால் மட்டுமே பரிசை பெற வேண்டுமென்பது மட்டுமே என் எண்ணம். காளை பிடிபட்டுவிட்டால் பரிசு பெற மாட்டேன். திறமைக்கு மட்டுமே பரிசு என்பதை மனதில் வைத்துக்கொண்டு காளை பிடிபட்டால் விழா கமிட்டி தரும் ஆறுதல் பரிசுகளை வாங்க எனக்கு விருப்பமில்லை. ஜல்லிக்கட்டு வளர்க்கும் ஆர்வம் என்னோடு விட்டுவிடாமல், எனது அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல உள்ளேன்” என பெருமையாக கூறுகிறார்.

jallikattu bulls

காளை வளர்ப்பதில் காட்டும் அதே ஆர்வத்தை கல்வியிலும் காட்டுவதாக கூறுகிறார் யோகதர்ஷினி. மகள் யோகதர்ஷினியின் இந்த ஜல்லிக்கட்டு ஆர்வம் குறித்து அவரின் தந்தை முத்துகோனார் பேசுகையில், “என் மகளின் திறமையை ஊரே பாராட்டினாலும், எனது சொந்த பந்தங்கள் அதனை விரும்புவதில்லை. ஆனாலும் என் மகளின் ஆசையை நிறைவேற்றும் தந்தையாகவே நான் இருக்க விரும்புகிறேன். அதனாலேயே மகளின் விருப்பப்படி ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கிக் கொடுக்கிறேன்” என்கிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், தனது 9 வயது முதல் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருவதாகவும் இளம் வயதில் மாடுபிடி வீரராக காளைகளை அடக்கியதாகவும், மாடுபிடி வீரர் என்ற திறன் தன்னோடு போனாலும் ஜல்லிக்கட்டு காளையை தன் மகள் வளர்த்து வருவது தமக்கும் பெண்களுக்கும் பெருமை சேர்ப்பதாக நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.

Post a Comment

Previous Post Next Post