
திருச்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரை முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி, "ஒரு முதல்வர், அவரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலை பார்த்து வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் விமர்சிப்பது போன்ற செயல்களை தவிர்க்கலாம்” என கூறியுள்ளார். தொடர்ந்து இவ்வழக்கில் சாட்டை துரைமுருகன், தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாட்டை துரைமுருகன் சில தினங்களுக்கு முன்னர் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இதுகுறித்து விசாரணை செய்த நீதிமன்றம், “இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன்” என உறுதிமொழி பத்திரம் பெற்றுக் கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.
தொடர்புடைய செய்தி: யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்தது மூன்றாவது வழக்கு

இந்நிலையில் "சாட்டை துரைமுருகன், நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசி வருகிறார்” எனக்கூறி அதுகுறித்து மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "மனுதாரர் அரசியல் தலைவர்களை அவதூறாக விமர்சிக்க மாட்டேன் என நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த நிலையில், முதல்வரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து உள்ளார். நீதிமன்றத்திற்கு அளித்த உறுதியை மீறும் வகையில் அவர் செயல்பட்டதால் அவரது ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். நீதிமன்றத்திற்கு உறுதியளித்த பின்னர் சாட்டை துரை முருகன் மீது 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "ஒரு முதல்வர், அவரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே வேலை பார்த்து வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் இதுபோன்ற செயல்களை தவிர்க்கலாம்” என குறிப்பிட்டு, சாட்டை துரைமுருகன் பேசிய விபரங்களை வழங்குமாறு அரசு தரப்புக்கு குறிப்பிட்டார். அதற்கு அரசு தரப்பில் CDயாக தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதனை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, “சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறும் வகையில் செயல்பட்டிருந்தால், அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும்” என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News