
மத்திய அரசு அறிவித்தபடி ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2024-ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசினார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது திமுக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்களாகிறது. தேர்தல் வாக்குறுதிகளாக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு, சம்பிரதாயத்திற்காக ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கிய வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, சுயஉதவிக் குழுக்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் தள்ளுபடி போன்ற எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
மக்களின் பிரதான தேர்தல் அறிக்கையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, விடியும் அரசு எனக் கோரி தமிழக மக்களை வஞ்சித்து விடியாத அரசாக செயல்பட்டு வருகிறது. வாக்குகளை வாங்குவதற்காக கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை அளித்து விட்டு ஏமாற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது" என்றவர் தொடர்ந்து...

கட்டுமான தொழிலில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிமெண்ட் விலையை உயர்த்திய திமுக அரசு அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏழை எளிய மக்களுக்காக அதிமுக அரசால் துவங்கப்பட்ட அம்மா உணவகத்தை மூடும் நோக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுக்காமல் ஏமாற்றி வரும் அரசாகவும் திகழ்ந்து வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் முதலமைச்சர் பொம்மை போன்று செயல்படுகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையை ஏவிவிட்டு பொய் வழக்குகளை போட்டு மக்களை திசை திருப்பும் நோக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, எவ்வளவு அவதூறு பரப்பினாலும் சட்டப்படி எதிர்கொள்வோம். மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News