மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ''தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தைப் பெருக்குவதில் ஆண்டுதோறும் பொழிகின்ற வடகிழக்குப் பருவமழைக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இந்த ஆண்டு அதன் பங்கு மிக அதிகமாகி உபரியாகிவிட்டது. வழக்கத்தைவிட அதிகமான அளவில் வடகிழக்குப் பருவமழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
பருவமழை தொடங்குவதற்கு முன்பே, வடிகால்களைச் சீரமைக்கும் பணிகளை அரசு நிர்வாகம் விரைவாக மேற்கொண்டது. அணைகளையும் நீர்த்தேக்கங்களையும் தொடர்ந்து கண்காணித்து வந்தது. நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கான பணிகள் அனைத்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. அதனால் தான், சென்னை நகரில் நவம்பர் 6-ஆம் நாள் இரவில் தொடங்கி நவம்பர் 11-ஆம் நாள் வரை தொடர்ச்சியாக அதிகனமழை பெய்த நிலையிலும், 2015 போல வெள்ள பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பல இடங்களில் தேங்கிய மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டது. சில இடங்களில் தவிர்த்திட இயலாத காரணங்களினால் சற்று காலதாமதமானபோதும் பணிகள் தொடர்ந்து சரியாகவே நடைபெற்றன.
நவம்பர் 6-ஆம் நாள் இரவில் விடிய விடிய சென்னையில் மழை பெய்த நிலையில், உங்களில் ஒருவனான நான், நவம்பர் 7-ஆம் நாள் காலை முதல் மாலை வரை பாதிப்புகளை ஆய்வு செய்ததுடன், மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, உரிய உதவிகளைச் செய்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டேன். தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திடும் பணியையும், மக்களைச் சந்திக்கும் அடிப்படைக் கடமையையும் ஒவ்வொரு நாளும் மேற்கொண்டேன்.
அமைச்சர்கள், அதிகாரிகள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி நிர்வாகத்தினர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர், வருவாய்த் துறையினர், பொறியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் மழை - வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மிகுந்த பொறுப்புடன் மேற்கொண்டதை நன்றிப் பெருக்குடன் எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளேன். அரசு இயந்திரம் 24X7 நேரமும் இடைவெளியின்றி இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, மக்களின் கோரிக்கைகளை தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்து, அவை உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டன.
தலைநகர் சென்னை போலவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களும் பெருமழையால் பாதிக்கப்பட்டிருந்ததால், நவம்பர் 12-ஆம் நாளன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேரில் ஆய்வுப் பணியை மேற்கொண்டேன்; பாதிக்கப்பட்ட நம் மக்களைச் சந்தித்தேன். வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும். அவற்றில் வெள்ளம் ஏற்படாதவாறு பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும். இரண்டுமே அரசின் பணிதான் - கடமைதான் என்பதை உணர்ந்து இரண்டு மாவட்டங்களிலும் ஆய்வுப் பணியை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை எடுத்திட களத்திலிருந்தவாறே உத்தரவிட்டேன்.
மாநிலம் முழுவதும் பெய்த பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் தாளடி - சம்பா பருவ நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கின்றன என்ற செய்தி கிடைத்த வேகத்தில், உடனடியாக உழவர் பெருமக்களின் துயர் துடைக்கவும், மக்களின் நலன் காக்கவும் 7 அமைச்சர்கள் கொண்ட குழுவினை அமைத்து உடனடியாக ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 12-ஆம் நாள் இரவு புதுச்சேரிக்கு செல்லும் வழியில் கழகத்தினரையும் பொதுமக்களையும் சந்தித்து நிலவரங்களைக் கேட்டறிந்தேன். நவம்பர் 13-ஆம் நாள் காலையில் கடலூர் மாவட்டத்தில் ஆய்வுப் பணியை மேற்கொண்டேன். ஆடுர்அகரம் என்ற இடத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள், வெள்ளபாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள ஆவன செய்தேன்.
கடலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் புத்தூர் கிராமத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ததுடன், நெல் விவசாயிகளிடம் வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களைக் கேட்டறியும் வாய்ப்பு அமைந்தது. நாகை மாவட்டம் கருங்கண்ணி என்ற இடத்தில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நெற்பயிர்களைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தபோது, தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உழவர் பெருமக்கள் நேரில் தெரிவித்தனர். அருந்தவம்புலம் என்ற இடத்தில் பாதிப்புகளைப் பார்வையிட்டதுடன், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன.
அன்றைய நாளில் தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு செய்திருந்ததால், பயண வழியில் இருந்த மருத்துவ முகாமுக்கும் நேரில் சென்று, அங்கு நடைபெற்ற மருத்துவப் பணிகளைப் பார்வையிடவும் அங்கிருந்த மக்களிடம் மழைக்கால உடல்நலப் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வாய்ப்பு அமைந்தது.தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து கவனத்துடன் ஆய்வுகளை மேற்கொண்டதன் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட இராயநல்லூர், புழுதிக்குடி ஆகிய இடங்களில் பாதிப்புக்குள்ளாகியிருந்த உழவர்களை சந்தித்து உரையாடினேன்.
தமிழ்நாட்டின் தெற்கு எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகளை மிகுந்த கவலையுடன் கவனித்த நிலையில், அங்கும் நேரடிப் பயணத்தை மேற்கொள்கிறேன். அதுபோலவே, தமிழ்நாடு முழுவதும் தொலைநோக்குப் பார்வையுடனான மழைநீர் வடிகால் கட்டமைப்பை உருவாக்கி, நீர் ஆதாரங்களைப் பெருக்குவதே நமது அரசின் தலையாய நோக்கமாகும்.மழையிலும் வெயிலிலும் மக்களுக்குக் குடையாகக் திமுக அரசு திகழும் என்ற உறுதியினை வழங்குகிறேன். பேரிடர் காலத்தில் மக்களை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நமது அரசின் தலையாய கடமை. எந்நாளும் மக்களுடனேயே இருப்போம்; மாநிலத்தைக் காப்போம்!'' என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News