
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சியின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் கே.கே.நகர், சாலிகிராமம், கோடம்பாக்கம், தி நகர், ராமாபுரம், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கொட்டிவாக்கம், மயிலாப்பூர், மடிப்பாக்கம், ஆழ்வார்ப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அடையார், கிண்டி, மீனம்பாக்கம் வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள ரங்கராஜபுரம் பிரதான சாலையை ஒட்டியுள்ள உட்புற சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் காலை வேளையில் பணிக்கு மற்றும் இதர தேவைகளுக்காக மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. உட்புற சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. உட்புற சாலைகள் வழியாக பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் எளிதில் நடந்து செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. சென்னை மாநகராட்சி மோட்டார் பம்ப் கொண்டு அப்பகுதியில் உட்புற சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News