
தீயணைப்பு, காவல்துறை, சிறைத்துறை காலி பணியிடங்களுக்கான நடத்தப்பட்ட தேர்வில் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள்யாவும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
காவல், சிறை, சீர்திருத்த பணிகள், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைகளிலுள்ள 11,741 + 72 (பின்னடைவு காலிப்பணியிடங்கள்) இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுத் தேர்வுக்கான அறிவிப்பினை 17.09.2020 அன்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கான எழுத்துத் தேர்வில் 5,50,314 விண்ணப்பதாரர்களுக்கு, தமிழகத்திலுள்ள 37 மையங்களில் 13.12.2020 அன்று நடத்தப்பட்டு எழுத்துத் தேர்வுக்கான முடிவு 19.02.2021 அன்று வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 1:5 விகிதத்தில் 20 மையங்களில் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் 22.09.2021 மற்றும் 23.09.2021 ஆகிய நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 113 விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இறுதியாக 3,845 விண்ணப்பதாரர்கள் மாவட்ட, மாநகர ஆயுதப்படைக்கும், 6,545 விண்ணப்பபதாரர்கள் தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கும், 129 விண்ணப்பதாரர்கள் சிறை, சீர்திருத்தப்பணிகள் துறைக்கும் மற்றும் 1,293 விண்ணப்பதாரர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கும் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தொடர்புடைய செய்தி: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பிய தேர்வு முகமை
மொத்தமாக 11,812 விண்ணப்பதாரர்கள் (3,065 பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் 3 பிற பாலினத்தவர்கள்) இந்த பொதுத் தேர்வு-2020ல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சேர்க்கை எண்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய குழும இணையதளம் www.tnusrbonline.org-ல் இன்று 26.11.2021 வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணியாணை வழங்குவதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை மற்றும் முந்தைய பழக்க வழங்கங்கள் தொடர்பான காவல் விசாரணை அந்தந்தத் துறை மூலம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இயக்குனரும் டிஜிபியுமான சீமா அகர்வால் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News