
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா இரண்டாவது அலை பரவிய நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா தொற்று தற்போது குறைந்துள்ள நிலையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுலா பயணிகள் இரு தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான இணையதள சான்றிதழை சோதனைச் சாவடிகளில் காட்டினால் மட்டுமே ஒகேனக்கல்லுக்கு அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பரிசல் ஓட்டுவோர், எண்ணெய் மசாஜ் செய்வோர் மற்றும் வணிகர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படும் நிலையில், மாலை 4:30 மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆற்றிலும், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசல் பயணத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News